அரசு கட்டிடம் மீது மரம் சாய்ந்து விழுந்தது
கிணத்துக்கடவு பகுதியில் பலத்த காற்று வீசியது. அரசு கட்டிடம் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிணத்துக்கடவு
மரம் விழுந்தது
கிணத்துக்கடவு சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கிணத்துக்கடவில் வானம் மேகமூட்டமாக இருந்தது. பின்னர் மதியம் 1 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள கிணத்துக்கடவு சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் இருந்த பூவரச மரம் வேருடன் சாய்ந்து கட்டிடம் மீது விழுந்தது.
மேலும் மின் ஒயர் மீது மரம் விழுந்தது. அலுவலகத்துக்கு பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அப்போது 2 பேர் மரக்கிளைக்குள் சிக்கியதால் சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தீயணைப்பு நிலைய அதிகாரி காளிமுத்து மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுட்டனர்.
2 பேர் படுகாயம்
மரக்கிளையை எந்திரம் மூலம் வெட்டி அகற்றி 2 பேரை மீட்டனர். மரம் விழுந்ததில் கோவை போத்தனூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த பரூக் (வயது 65), கரும்புக்கடை சோபா கார்டன் பகுதியை சேர்ந்த அலாவுதீன்(52) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். பரூக் கோவை தனியார் மருத்துவமனையிலும், அலாவுதீன் கிணத்துக்கடவு தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்த பொதுமக்களை போலீசார் பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், கிணத்துக்கடவு பேரூராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மரம் மின் ஒயர் மீது விழுந்தபோது, வளாகத்தில் நின்றவர்கள் உஷாராகி அங்கிருந்து ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story