திருவாரூரில் விற்பனைக்கு குவிந்த ‘பட்டுக்கோட்டை’ பலாப்பழங்கள்
பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூருக்கு பலாப்பழங்கள் விற்பனைக்காக அதிக அளவில் குவிந்துள்ளன.
திருவாரூர்:-
பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூருக்கு பலாப்பழங்கள் விற்பனைக்காக அதிக அளவில் குவிந்துள்ளன.
சத்து நிறைந்தது
மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகளாக திகழ்கின்றன. இதில் பெரிய அளவு கொண்ட பழம் பலாப்பழம். அளவை போன்றே இதில் சத்துக்களும் அதிகம். நார்ச்சத்து, வைட்டமின்-ஏ, புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற பலவகையான சத்துக்கள் பலாப் பழத்தில் உள்ளன.
கோடை கால பழமாக திகழும் சுவை மிகுந்த பலாப்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். பலாப்பழங்கள் பண்ருட்டி, பட்டுக்கோட்டை ஆவணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு விளைகிறது.
பட்டுக்கோட்டை பழங்கள்
இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பலாப்பழம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பட்டுக்கோட்டை ஆவணத்தில் இருந்து திருவாரூர் பகுதிக்கு விற்பனைக்காக பலாப்பழங்கள் அதிக அளவில் குவிந்துள்ளன. மொத்தமாகவும், சில்லறையில் சுளை, சுளைகளாகவும் விற்பனையாகும் இந்த பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட பருவ காலத்தில் கிடைக்கும் பழம் என்பதால் திருவாரூர் பகுதியில் ‘பட்டுக்கோட்டை’ பலாப்பழங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
தற்போது ஒரு பழம் ரூ.150-ல் இருந்து ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழம் வரத்து மேலும் அதிகரிக்கும்போது விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story