பிரமோத் மத்வராஜ் காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டார் -துருவ நாராயணா பேட்டி
கட்சியில் இருந்து விலகி, பிரமோத் மத்வராஜ் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என காங்கிரஸ் செயல் தலைவர் துருவ நாராயண் கூறினார்.
உடுப்பி:
சித்தராமையா ஆட்சியில்...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், மாநில துணை தலைவருமாக இருந்தவர் பிரமோத் மத்வராஜ். இவர் சித்தராமையா ஆட்சியின்போது மீன்வளத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியால் தனக்கு சில தீர்க்க முடியாத சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறி அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளில்
இருந்தும் விலகினார். மேலும், அவர் பா.ஜனதாவில் சேர்ந்தார்.
இந்த நிலையில் உடுப்பி காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் துருவ நாராயண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி பிரமோத் மத்வராஜிற்கு எம்.எல்.ஏ. பதவி முதல் கட்சியின் மாநில துணை தலைவர் பதவி வரை வழங்கியது.மிகவும் குறுகிய காலத்தில் பிரமோத்திற்கு காங்கிரஸ் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. ஆனால் அவர் அவசர, அவசரமாக கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார். அவரை நம்பி
ஓட்டு போட்டவர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்திவிட்டார்.
பா.ஜனதாவின் பகல் கனவு
அரசியல் தேங்கிய நீர் அல்ல. கட்சியை ஒருங்கிணைத்து பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் அல்லாத கர்நாடகத்தை உருவாக்குவோம் என்று பா.ஜனதா கூறி வருகிறது. அது அவர்களது பகல் கனவு ஆகும்.
பா.ஜனதா தலைவர்களும் சிறை சென்று வந்தவர்கள் தான். அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்) மானியத்தை பா.ஜனதா குறைத்துவிட்டது.
மக்கள் பா.ஜனதா மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் அந்த நம்பிக்கையை அந்த அரசு பாழாக்குகிறது. ஊழலை மறைக்க அரசு கலவரங்கள் மற்றும் மத பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story