பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்னிலம்:-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கமுதக்குடி. இந்த கிராமத்தை சேர்ந்த லெனின் என்பவர் மகன் மணிகண்டன்(வயது 25). தனது குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வந்த இவர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்து இருந்தார்.
அதன்பேரில் அவருக்கு வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டும் பணிகளை தொடங்கினார்.
லஞ்சம் வாங்கிய ஊழியர்
அப்போது நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர், வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக ரூ.3 ஆயிரத்தை மணிகண்டனிடம் இருந்து லஞ்சமாக வாங்கி உள்ளார். வீட்டின் மேற்கூரை கான்கிரீட் போட்டவுடன் சிறிதளவு தொகை மணிகண்டனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையில் இருந்தும் ரூ.15 ஆயிரத்தை அதே வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் வீடு கட்டுவதற்கு மேலும் பணம் தேவைப்பட்டதால் தான் வெளிநாடு செல்வதற்காக கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை கொண்டு மணிகண்டன் வீடு கட்டும் பணிகளுக்கு செலவு செய்துள்ளார். இதனிடையே திட்ட பணிகளுக்கான மேலும் தொகை சில நாட்களில் வந்து விடும் என மணிகண்டனிடம், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் கூறி உள்ளார். அவர் கூறியபடி பணம் வரவில்லை.
பிரதமரின் வீடு கட்டும் திட்ட பணிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாலும், கடன் வாங்கியதாலும் மனமுடைந்த மணிகண்டன் நேற்று வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
வீடியோ பதிவு
மேலும் தான் லஞ்சம் கொடுத்த விவரத்தை பேசி அதை மணிகண்டன் வீடியோவாக பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விஷம் குடித்த மணிகண்டனுக்கு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story