சினிமா பாணியில் வயிற்றுக்குள் மறைத்து ரூ.6½ கோடி ஹெராயின் கடத்திய உகாண்டா வாலிபர்


சினிமா பாணியில் வயிற்றுக்குள் மறைத்து ரூ.6½ கோடி ஹெராயின் கடத்திய உகாண்டா வாலிபர்
x
தினத்தந்தி 13 May 2022 5:27 AM IST (Updated: 13 May 2022 5:27 AM IST)
t-max-icont-min-icon

சினிமா பாணியில் வயிற்றுக்குள் மறைத்து ரூ.6½ கோடி ஹெராயின் போதை மாத்திரைகளை கடத்திய உகாண்டா வாலிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சார்ஜா விமானத்தில் வந்த உகாண்டா நாட்டை சேர்ந்த எளி ஜேம்ஸ் ஒப்பி (வயது 21) என்ற வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். முதலில் சுற்றுலா வந்ததாக கூறிய அவர், பின்னர் முன்னுக்குபின் முரணாக பேசினார்.

ஹெராயின் மாத்திரைகள்

இதையடுத்து அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவரது வயிற்றுக்குள் ஏதோ மர்ம பொருளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவரது வயிற்றை ‘ஸ்கேன்’ செய்து பார்த்ததில், அதிக அளவிலான மாத்திரைகள் இருப்பதாக தெரியவந்தது. பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, இனிமா கொடுத்து வயிற்றுக்குள் இருந்த மர்மபொருளை வெளியே எடுத்தனர். அதில் 80 மாத்திரை ‘கேப்சூல்களில்’ போதை பொருளை அடைத்து, அதை விழுங்கி வயிற்றில் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ‘கேப்சூல்’களை ஆய்வுக்கு அனுப்பியதில் அவை ஹெராயின் போதை மாத்திரைகள் என்பது உறுதியானது. ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடைகொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது

இது தொடர்பாக உகாண்டா வாலிபர் எலி ஜேம்ஸ் ஒப்பியை கைது செய்தனர். மேலும் அவரிடம், ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து, யாருக்காக கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?. சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவையில் ‘அயன்’ சினிமா பாணியில் ரூ.4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட்டார். தற்போது அதே பாணியில் சென்னையில் உகாண்டா நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 More update

Next Story