2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றார். குடும்ப பிரச்சினையில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
கொரடாச்சேரி:-
கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்றார். குடும்ப பிரச்சினையில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள குளிக்கரையை அடுத்த கடமங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அனுப்பிரியா(வயது 32). இவருடைய கணவர் விஜய்(38). இவர், துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. பாலஸ்ரீ (11), மதுஸ்ரீ (7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அனுப்பிரியா பிறந்த ஊர் நாகை மாவட்டம் மருதூர் ஆகும். அனுப்ரியாவின் மாமனார் மற்றும் மாமியார் காரைக்குடியில் வசித்து வருகின்றனர். இதனால் கடந்த 2 மாதங்களாக கடமங்குடி பகுதியில் வாடகை வீட்டில் அனுப்பிரியா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
குடும்ப தகராறு
இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள விஜய்க்கும், அனுப்பிரியாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனிலேயே சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அனுப்பிரியா நேற்று முன்தினம் தனது 2 மகள்களுக்கும் பூச்சி மருந்தை(விஷம்) கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
3 பேருக்கும் சிகிச்சை
இதில் 3 பேருக்கும் வாந்தி ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் பெண் எடுத்த இந்த விபரீத முடிவு அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story