2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய் பரிசோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்


2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய் பரிசோதனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 15 May 2022 12:30 AM IST (Updated: 14 May 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோட்டூர்:-

தமிழகத்தில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

பேட்டி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை நிலையத்தை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களில்...

தமிழகத்தில் மொத்தம் உள்ள 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை தினமும் காலை 7 மணிக்கு தொடங்கும். இதன் மூலம் ஏராளமானோர் பயன் அடைவார்கள். நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட கொட்டையூர் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
மேலும் இதன் வளாகத்தில் மட்டும் ரூ.2.45 கோடி மதிப்பீட்டிலான 3 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்த கட்டிடங்களை காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார். 

தக்காளி காய்ச்சல்

தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார மையங்களும், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களும் அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. கேரளாவில் பரவி உள்ள தக்காளி காய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் யாருக்கும் இத்தகைய வைரஸ் இல்லை. 
இத்தகைய வைரஸ் தொற்றுநோய் வகையானது இல்லை என்றபோதிலும் கேரள-தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. 

ரூ.4 கோடி ஒதுக்கீடு

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story