மரவள்ளி பயிரில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


மரவள்ளி பயிரில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 15 May 2022 12:30 AM IST (Updated: 14 May 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

மரவள்ளி பயிரில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நீடாமங்கலம்:-

மரவள்ளி பயிரில் செஞ்சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

மரவள்ளி பயிர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன், கருவாக்குறிச்சி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மரவள்ளி பயிரில் செஞ்சிலந்தி தாக்குதல் இருப்பதை உறுதி செய்தார். 
இதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அவர் கூறியதாவது:- கருவாக்குறிச்சி, ஓவேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100 எக்டேர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் செஞ்சிலந்தி தாக்கம் இருப்பது கள ஆய்வின் போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. செஞ்சிலந்திகள் இலையின் அடிப்புறத்தில் இருந்துகொண்டு நூலாம்படை போல பின்னி இலைகளில் உள்ள பச்சையத்தை உறிஞ்சும் தன்மை உடையது. இதனால் இலைகளின் மேல்பரப்பில் மஞ்சள் நிறத்திட்டுகளாகவும், மைய நரம்புகளை ஒட்டி பரவி பிறகு எரிக்கப்பட்டது போன்ற நீண்ட கோடுகள் போல பார்ப்பதற்கு தென்படும். 

வளர்ச்சி பாதிப்பு

இதன் தீவிர தாக்குதல் வெளிப்படுத்தும் போது இலையின் இருபுறமும் தோன்றி சாறை உறிஞ்சும் தன்மை உடையது. இதனால் இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இலைகள் உதிர்ந்து விடும். மேலும் இலைகளின் மேற்பரப்பில் துருப்பிடித்தது போன்ற தோற்றத்தையும் பார்க்க முடியும். தாக்குதல் அதிகமாக உள்ள செடிகளின் அனைத்து இலைகளும் கொட்டி மொத்த செடியும் வாடி இறந்துவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தீவிர தாக்குதலின் போது ஒரு இலைக்கு 200 முதல் 500 சிலந்திகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. 
தற்போது நிலவிவரும் வெயில் காரணமாக செடிகளுக்கு நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிகமான இலை உதிர்கிறது. இதுபோன்ற சிலந்திகள் தாக்குதலினால் பயிருக்கு கணிசமான சேதாரம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

கட்டுப்படுத்தும் முறை

விவசாயிகள் இதனை கட்டுப்படுத்த பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். மாறாக இதனை கட்டுப்படுத்த சிலந்தி கொல்லிகளை உபயோகிக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. ஏனென்றால் இவைகள் பூச்சிகள் அல்லாத சிலந்தி வகையை சேர்ந்தது. எனவே சிலந்தி கொல்லிகளை உபயோகித்தால் மட்டுமே இவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும். 
தாவரப் பூச்சி கொல்லியான வேப்ப எண்ணெய் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்க வேண்டும். செயற்கை சிலந்தி கொல்லியான நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அல்லது டைக்கோபால் 2.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஸ்பைரோமெசிபெண் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஸ்பைரோடெட்ராமெட் 1.5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின் போது நீடாமங்கலம் வட்டார தோட்டக்கலை துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story