அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலித்த ஊழியர் பணியில் இருந்து விடுவிப்பு கலெக்டர் மோகன் நடவடிக்கை


அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலித்த ஊழியர் பணியில் இருந்து விடுவிப்பு கலெக்டர் மோகன் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 May 2022 10:02 PM IST (Updated: 14 May 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூலித்த ஊழியரை பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் 1,000 மெட்ரிக் டன் அளவிற்கு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் அரசு வழிகாட்டுதலின்படி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். 

எந்தவித கட்டணமும் பணியாளர்கள் வசூல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதுடன் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

 ஊழியர் மீது நடவடிக்கை

இந்நிலையில் செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றால் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பருவகால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன் என்பவர் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் அலுவலர்கள் கொண்ட குழுவினர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில் விவசாயிகளிடம் இருந்து வரப்பெற்ற புகார் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பருவகால பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரனை அப்பணியில் இருந்து விடுவித்து மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற தவறான செயல்களை மற்ற நெல் கொள்முதல் நிலையங்களில் யாரேனும் மேற்கொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story