அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் சிக்கினார்
பெரியகுளம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம்:
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரபாண்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி சிறப்பு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சின் கண்டக்டராக பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 50) என்பவர் இருந்தார். அந்த பஸ் பெரியகுளம் அருகே வந்தபோது படிக்கட்டில் பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை இருக்கையில் வந்து அமரும்படி கண்டக்டர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அங்கு கீழே கிடந்த கல்லை எடுத்து கண்டக்டரை மிரட்டினார். பின்னர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடி விட்டார். இதனைத்தொடர்ந்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சரத்துப்பட்டியயை சேர்ந்த ஜெயக்குமார் (30) என்பவர் பஸ்சின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story