ஜல்லிக்கட்டில் 464 காளைகள் சீறிப்பாய்ந்தன


ஜல்லிக்கட்டில் 464 காளைகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 17 May 2022 3:34 AM IST (Updated: 17 May 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் 464 காளைகள் சீறிப்பாய்ந்தன.

மீன்சுருட்டி:

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குமிளங்குழி கிராமத்தில் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஏற்றனர். பின்னர் முதலாவதாக கோவில் காளை விடப்பட்டு, அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் மதுரை, தஞ்சாவூர், கரூர், கடலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 464 காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. 200 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு குழுவாக பங்கேற்று, சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர்.

17 பேர் காயம்

இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சில்வர் அண்டா, கட்டில், மின்விசிறி என ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் காளைகள் முட்டியதில் திருமானூர் முருகானந்தம் மகன் மணி(வயது 23), சேலம் அழகேசன் மகன் ரத்தினவேல்(25), மீன்சுருட்டி சேகர் மகன் கோபி(35) உள்ளிட்ட மாடுபிடி வீரர்கள் 7 பேரும், பார்வையாளர்கள் 10 பேரும் காயம் அடைந்தனர்.

இவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனை

முன்னதாக வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை புனித சவேரியார் ஆலய ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினர் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story