போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையம் முற்றுகை


போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 18 May 2022 1:01 AM IST (Updated: 18 May 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் விபத்தில் தொழிலாளி இறந்த சம்பவத்தில் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

குள்ளனம்பட்டி:
வேடசந்தூர் அருகேயுள்ள வேல்வார்கோட்டையை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மகள் பர்வின்பானுவை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் பேகம்பூருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து திண்டுக்கல்-திருச்சி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சீலப்பாடி பிரிவு அருகே சாலையை கடந்தபோது அம்பாத்துரை போலீஸ்நிலையத்தில்  போலீஸ்காரராக பணிபுரியும் சர்சில்ரூசோ (31), அவரது மனைவி ரெய்னி சுஷ்மிதாஜெனி (21) ஆகியோர் வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக அக்பர்அலி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அக்பர்அலி, ரெய்னி சுஷ்மிதாஜெனி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்பர்அலி திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், ரெய்னி சுஷ்மிதாஜெனி தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே விபத்து குறித்து ரெய்னி சுஷ்மிதாஜெனி, அக்பர்அலி சார்பில் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. ரெய்னி சுஷ்மிதாஜெனி புகார் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் அக்பர்அலி புகார் மீது வழக்கு பதியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சிகிச்ைச பலனின்றி அக்பர்அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அக்பர்அலி புகாரின்பேரில் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சூப்பிரண்டு கூறியதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து போலீஸ்காரர் சர்சில்ரூசோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Next Story