சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்


சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி  கிராமமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 18 May 2022 1:03 AM IST (Updated: 18 May 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பேட்டை அருகே கிராமங்களுக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே கிராமங்களுக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தேசிய நெடுஞ்சாலை பணிகள் 
அய்யம்பேட்டை அருகே தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளால் சாலையோரம் இருந்த பல கிராம சாலைகள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டது. குறிப்பாக புண்ணியநல்லூர் - சூலமங்கலம் கிராம சாலையும், வையச்சேரி கிராம சாலையும், பொரக்குடி இடுகாட்டு சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது. 
சாலைமறியல் 
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் கடந்த மாதம் தஞ்சை -விக்கிரவாண்டி சாலை வையச்சேரியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதன் பிறகும் அதிகாரிகள் சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அய்யம்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு வையச்சேரி ஊராட்சி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சாமு.தர்மராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், ஊராட்சி மன்ற  தலைவர்கள் துரை. ராம்நாத், சுசீலா பத்மநாபன் உள்பட கிராம மக்கள் கலந்துகொண்டனர். 
பேச்சுவார்த்தை 
தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. 
தொடர்ந்து சர்வீஸ் சாலை தேவைப்படும் இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு 
இதையடுத்து அதிகாரிகள் - கிராம மக்கள் பங்கேற்ற அமைதிக் கூட்டம் வையச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. அப்போது கிராம மக்களின் கோரிக்கை குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், அனுமதி கிடைத்ததும் கிராமங்களுக்கு தேவையான சர்வீஸ் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தஞ்சை - கும்பகோணம் நெடுஞ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story