மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்


மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்
x
தினத்தந்தி 18 May 2022 1:39 AM IST (Updated: 18 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரடாச்சேரி, மே.18-
கொரடாச்சேரி அருகே மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 
பழ வியாபாரி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே  கம்பன்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். இவர், நாகையில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி தேவி(வயது 31). இவர்களுக்கு குஷாந்த்(11) என்ற மகனும், யோசினி(10) என்கிற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் பழ வியாபாரம் செய்ய சென்ற ஜெயசீலன் கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் நேற்று முன்தினம் இரவு கணவரை போனில் தொடர்பு கொண்ட நந்தினிதேவி ஏன் வீட்டுக்கு வரவில்லை? என கேட்டுள்ளார். 
மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்தார்
அதற்கு அவர், வீட்டில் குடும்ப செலவிற்கு கூடுதல் பணம் தேவைப்படுவதால் தொடர்ந்து வியாபாரம் பார்த்துவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார். இதில் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
கணவன் வீட்டுக்கு வர மறுப்பதால் மனவேதனை அடைந்த நந்தினி தேவி வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) எடுத்து மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் அந்த எலி மருந்தை தானும் குடித்துள்ளார். இதனால் 3 பேருக்கும் வாந்தி ஏற்பட்டுள்ளது.  
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இந்த நிலையில் நேற்று காலை ஜெயசீலன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி மற்றும் மகன், மகள் அகியோர் வாந்தி எடுத்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் விஷம் குடித்ததாக தெரிவித்தனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் உறவினர்கள் உதவியோடு 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரிதாபம்
மகன், மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story