புறம்போக்கு நிலங்களில் குடியிருந்த 932 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பு
ஈரோடு மாநகராட்சியையொட்டி புறம்போக்கு இடங்களில் குடியிருந்து வந்த 932 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டு இருப்பதால், பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியையொட்டி புறம்போக்கு இடங்களில் குடியிருந்து வந்த 932 குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டு இருப்பதால், பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
932 குடும்பங்களுக்கு வீடுகள்
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வந்தது. மத்திய அரசு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், தமிழ்நாடு அரசு ரூ.7 லட்சம் மானியத்துடன், பயனாளியின் பங்களிப்புடன் இந்த வீடுகள் தலா 400 சதுர அடியில் வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை, பால்கனி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. குடியிருப்பு பகுதிகளும் தார் ரோடு, மழைநீர் வடிகால், நூலகம், கடைகள், சமுதாயக்கூடம், தெருவிளக்குகள் வசதி செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு மொத்தம் 11 ஆயிரத்து 890 வீடுகள் கட்டப்பட்ட உள்ளன. தற்போது ஈரோடு மாநகரையொட்டிய பகுதிகளில் 1,184 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதில் 932 குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான விழா கடந்த ஜனவரி 10-ந் தேதி நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அதற்கான உத்தரவுகளை வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் ஒதுக்கீடுதாரர்களுக்கு உத்தரவுகள் வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து பயனாளிகள் அந்தந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். அரசு வழங்கிய வீடுகள் வசதியாக இருப்பதாக மகிழ்ச்சியாக உள்ளதாக கூறி உள்ளனர்.
ஆர்.ஷீலா
இதுபற்றி கொல்லம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் டி.ரவிச்சந்திரன் என்பவருடைய மனைவி ஆர்.ஷீலா கூறியதாவது:-
நாங்கள் கள்ளியங்காடு ஓடைப்பள்ளம் ஒட்டிய பகுதியில் குடிசையில் 36 ஆண்டுகள் வசித்து வந்தோம். மிகுந்த சிரமத்தின் கீழ் எங்கள் வாழ்க்கை நடந்தது. குழந்தைகளை படிக்க வைக்கவும் சிரமப்பட்டோம். இந்த நிலையில்தான் கொல்லம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் மாநகராட்சி பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு வீடு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் சாக்கடை துர்நாற்றம் வீசிய ஓடைப்பகுதி குடிசையை விட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மாடி வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த வீடு தமிழக முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் எங்களுக்கு சொந்த வீடாக அமைந்து இருக்கிறது. எங்கள் குழந்தைகளும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கா.ஜெமிலா
இதே குடியிருப்பில் வசித்து வரும் காஜாமொய்தீன் என்பவருடைய மனைவி கா.ஜெமிலா கூறியதாவது:-
நாங்கள் பெரும்பள்ளம் ஓடையை ஒட்டிய குடிசைப்பகுதியில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தோம். அங்கு மிகவும் சிரமப்பட்டு வந்தோம். மழைக்காலங்களில் குடிசைக்குள் சாக்கடை தண்ணீர் வந்து கடுமையாக பாதிக்கப்பட்டோம். வாடகை வீட்டுக்கு செல்ல முடியாத பொருளாதார சூழலில், அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினோம். அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் ஒப்படைத்தோம். ஒரு மாதத்தில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டது. உற்றார் உறவினர்களே கைவிட்டு விட்ட சூழலில், குடிசையில் வாழ்ந்த எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு மாடி வீட்டை சொந்தமாக வழங்கி எங்கள் வாழ்க்கைத்தரத்தை தமிழக முதல்- அமைச்சர் உயர்த்தி உள்ளார். எங்கள் குழந்தைகள் இப்போது மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story