கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரியலூர், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் 25 சதவீத மானியமும், மாநில அரசின் சார்பில் 25 சதவீத மானியமும் நிதி வழங்குவதாக அறிவித்து, விவசாயிகளை கோழி வளர்ப்பில் ஈடுபடுத்தினர். இதில் மாநில அரசு மானியம் வழங்கிய நிலையில், மத்திய அரசு வழங்கவில்லை என்று கூறி, அதனை கண்டித்தும், உடனடியாக மானியம் வழங்கக்கோரியும், கறிக்கோழி உற்பத்தி விலையை உயர்த்தி வழங்காத கார்ப்பரேட் கறிக்கோழி நிறுவனங்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஆண்டுக்கு ஒரு கிலோவுக்கு 1 ரூபாய் கூடுதலாக வழங்குவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பல்வேறு பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டபோதும் கறிக்கோழி வளர்ப்புக்கு ரூ.6.50 என்பதை 12 ரூபாயாக உயர்த்தி கோழிக்குஞ்சு வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.