செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி முதல் தினமும் அம்பாள் வீதி உலாவும், கரகாட்டம் உள்ளிட்டவையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கு, கரகாட்டம், வாணவேடிக்கை ஆகியவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அய்யனாருக்கு காப்பு அணிவித்தல், சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா ஆகியவை நேற்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை(வியாழக்கிழமை) இரண்டாம் நாள் தேர் பவனி நடக்கிறது. 20-ந் தேதி வேஷம் ஒப்புவித்தலுடன், திருத்தேர் கோவிலை வந்தடைகிறது. 22-ந் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு, அம்பாள் வீதி உலா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், திருத்தேர் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர். தேர்த்திருவிழாவை காண ஜெயங்கொண்டம், இலையூர், வாரியங்காவல், கண்டியங்கொல்லை, மருதூர், தேவனூர், உடையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.