பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று தொடக்கம்


பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 17 May 2022 8:26 PM GMT (Updated: 17 May 2022 8:26 PM GMT)

பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றத்தில் உள்ள நிலுவை மனுக்களை தீர்வு செய்திடும் வகையில் சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற முகாம் மற்றும் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்கள் இன்றும் (புதன்கிழமை) மற்றும் நாளையும் (வியாழக்கிழமை) பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர்(வ), வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை(வ), குன்னம் வட்டத்தில் வடக்கலூர், ஆலத்தூர் வட்டத்தில் நக்கசேலம் ஆகிய பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இதில் பெரம்பலூர் வட்டத்தில் 1.8.21 முதல் 31.1.22 வரையிலும், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் வட்டங்களில் 1.8.21 முதல் 30.4.22 வரையிலும் உள்ள காலங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்து தனிப்பட்டாவிற்காக உட்பிரிவு கட்டணம் செலுத்திய பொதுமக்கள் மற்றும் இ-சேவை மையம் மூலமாக உட்பிரிவு செய்து தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த மனுதாரர்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாளன்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தனிப்பட்டா பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிறப்பு முகாமில் நில அளவை (புல) எண்கள், உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார், காப்பாளர் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம் மற்றும் இதர கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story