பள்ளி அருகே சாலையோர பூங்கா அமைக்க வேண்டும்
பள்ளி அருகே சாலையோர பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தா.பழூர்:
கடுமையான துர்நாற்றம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டு இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் அமைந்துள்ளது. ஆனால் பள்ளி வளாகத்திற்கு வெளியில் சாலையோர கடைகள் அமைந்துள்ளன. இதில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், பல்வேறு சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு சிறு, சிறு கடைகள் அமைந்துள்ளன.
இதுமட்டுமின்றி அந்த இடத்திற்கு அவசியமே இல்லாமல் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதில் தொடர்ந்து நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த நீர் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டு பள்ளி வளாகத்திற்கு அருகில் சாக்கடை போல் செல்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
சாலையோர பூங்கா
அதேபோல் பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் பல்வேறு கடைகளை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். ஆனால் அகற்றப்பட்ட சிறிது காலத்திலேயே ஏற்கனவே கடை வைத்திருந்த நபர்கள் அங்கு மீண்டும் கடைகளை அமைத்து சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்துகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலை பகுதியிலும், தா.பழூர் - அண்ணங்காரம்பேட்டை சாலையிலும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதி முதல் சார்பதிவாளர் அலுவலகம் வரை உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சாலையோர பூங்கா அமைத்து, அதன் பராமரிப்பு பணிகளை ஊராட்சி நிர்வாகத்திடம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
கற்கும் திறன் மேம்படும்
இதன் மூலம் தா.பழூர் முகப்பு பகுதியான அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை ஒட்டிய இடங்களில் அழகான தோற்றப்பொலிவு ஏற்படும். அதுமட்டுமின்றி இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தவிர்க்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளியில் மாணவ, மாணவிகள் வருகை குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் தற்போது கொரோனா அச்சம் நீங்கி பள்ளி அனைத்து நாட்களிலும் செயல்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.எனவே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டிய பகுதிகளை சுகாதார சீர்கேடு இல்லாத பகுதியாக உருவாக்குவதுடன், அழகிய பூச்செடிகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செடிகளை நட்டு வளர்க்கும் வகையில் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டால். மாணவ-மாணவிகளின் மனதிற்கு இதமாக அமைந்து அவர்கள் கற்கும் திறன் மேம்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.