தமிழக அரசு மாநிலம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி


தமிழக அரசு மாநிலம் முழுவதும்  கல்குவாரிகளை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 18 May 2022 2:31 AM IST (Updated: 18 May 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு மாநிலம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்

நெல்லை:
தமிழக அரசு மாநிலம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
திருநாவுக்கரசர் எம்.பி. 
நெல்லை அடைமிதிப்பான்குளம் கல்குவாரி பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை திருநாவுக்கரசர் எம்.பி. நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்குவாரியில் நடந்த விபத்தில் 6 பேர் சிக்கி கொண்டனர். அதில் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நான், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் நேரில் சென்று பார்த்தோம். அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் 2 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
வெள்ளை அறிக்கை
இந்த குவாரியை பார்த்ததுமே விதிமுறை மீறி தான் செயல்பட்டு உள்ளது என்பது தெரிகிறது. இந்த கல்குவாரி முறைகேடாக செயல்பட்டதற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநிலங்களில் உள்ள அனைத்து குவாரிகளும் விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல். ஏ., நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆவுடையப்பன்
இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கல்குவாரி விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம், தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. குவாரியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அவருடன் நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு, நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், கணேஷ்குமார் ஆதித்தன், ஆழ்வாநேரி ஊராட்சி மன்ற தலைவர் சீனிதாஸ், தருவை ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள், கண்டித்தான்குளம் கிளை நிர்வாகிகள், நாங்குநேரி ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் இருந்தனர்.

Next Story