தொடர் கனமழை எதிரொலி: கடலோர மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கடலோர மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
மங்களூரு: தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கடலோர மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை கொட்டி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் நேற்று காலை முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மதியத்திற்கு பிறகு பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை ெவள்ளம் கரைபுரண்டு ஓடியது.
‘ரெட் அலர்ட்’
இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (புதன்கிழமை) கடலோர மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் ‘ரெட் அலர்ட்’ எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிகமாக மழை பெய்யும் பகுதிகளில் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்படும். இது 20 சென்டி மீட்டர் முதல் அதற்கு மேல் மிக அதிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும்.
கடலோர மாவட்டங்களில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்தப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன.
மீனவர்களுக்கு அறிவுரை
இந்த நிலையில், கடலோர மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, உடுப்பி கலெக்டர் குர்மா ராவ் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பொதுமக்கள் கடல் அருகிலோ, ஆறு, குளங்கள் அருகிலோ செல்ல வேண்டாம் என்றும், மின் கம்பங்கள், கட்டிடங்கள், மரங்கள் அருகே யாரும் நிற்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்க்கு செல்லும்படியும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
4 படகுகள் மூழ்கின
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உத்தரகன்னடா மாவட்டம் பட்கலில் பலத்த மழை கொட்டியது. இதன்காரணமாக, மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 படகுகள் கடலில் கவிழ்ந்து மூழ்கின. அந்த படகுகளை உள்ளூர் மீனவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் ஒரு படகு மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 3 படகுகளை மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 4 படகுகள் கடலில் மூழ்கியதால் மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






