பேச்சுவார்த்தையில் உடன்பாடு: செவிலியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நெல்லையில் செவிலியர் சாவுக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செவிலியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
நெல்லை:
நெல்லையில் செவிலியர் சாவுக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செவிலியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செவிலியர் சாவு
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் சின்னதம்பி. இந்து முன்னணி ஒன்றிய பொறுப்பாளர். இவருடைய மனைவி முருகலட்சுமி (வயது 34). இவர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை செய்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 12-ந்தேதி உயிரிழந்தார். முருகலட்சுமிக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் அவர் உயிர் இழந்ததாக கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக இந்து முன்னணியினர் ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் அருகில் தினமும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று 6-வது நாளாக செவிலியர் முருகலட்சுமி குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டும், மரணத்திற்கு நீதி கேட்டும் இந்து முன்னணி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், மாநில செயலாளர் குற்றாலநாதன், கோட்ட தலைவர் தங்கமனோகர், மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, ராஜசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்த நிலையில் சென்னையில் இருந்து உயர் மருத்துவ குழுவினர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் டீன் ரவிச்சந்திரன் மற்றும் டாக்டர்கள் குழுவினரிடம் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டனர்.
பின்னர் இந்து முன்னணி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, முருகலட்சுமியின் கணவர் சின்னதம்பிக்கு தற்காலிகமாக ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு பணி வழங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் நிரந்தர பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், டாக்டர்கள் சார்பில் தற்காலிக நிவாரணமும் வழங்கப்படுவதாக, உறுதி அளித்தனர். அவருக்கு துறை ரீதியாக கிடைக்க வேண்டிய பணப்பலன்களை விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
உடல் ஒப்படைப்பு
பின்னர் முருகலட்சுமி உடலுக்கு டாக்டர்கள், செவிலியர்கள், இந்து முன்னணி நிர்வாகிகள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story