வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக ரூ.2¾ கோடி மோசடி செய்த 4 பேர் கைது

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூர், சடயங்குப்பத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 53). இவரது நண்பர் கலிய பெருமாள் (65). இவர்கள் 2 பேரும் சேர்ந்து எம்.கே.பி.நகர் பகுதிகளில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகளை வாங்கி தருவதாக திருவொற்றியூர், எர்ணாவூர், மீஞ்சூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அவர்களை நம்பி வந்தவர்களிடம் முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை யாருக்கும் வீடு வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த வினோத் மற்றும் அவருடன் சேர்ந்த 34 பேர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இதுவரை 34 பேரிடம் ரூ.2 கோடியே 70 லட்சம் வாங்கி உள்ளது தெரியவந்தது.
இந்த வழக்கில் இசக்கிமுத்து, கலியபெருமாள், அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட திருவொற்றியூர் அப்பர் சாமி கோவில் தெருவை சேர்ந்த முருகன் (32), பெரியார் நகரை சேர்ந்த சதீஷ் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (38) என்ஜினீயரிங் படித்துள்ள இவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரை சேர்ந்த சுரேஷ் (40) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் வரை வாங்கிக்கொண்டு தலைமறைவானார்.
இதுகுறித்து தங்கராஜ் ஆவடி போலீஸ் கமிஷனரிடம் ஒரு வாரத்துக்கு முன்பு புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரனையில் தங்கராஜ் உள்பட மேலும் சிலரிடம் ரூ.60 லட்சம் வரை சுரேஷ் மோசடி செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் நேற்று அம்பத்தூர் வெங்கடாபுரம் சுக்கர் தெருவில் தலைமறைவாக இருந்த சுரேஷை போலீசார் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






