பசவராஜ் ஹொரட்டி முதல்-மந்திரி முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்


பசவராஜ் ஹொரட்டி முதல்-மந்திரி முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்
x
தினத்தந்தி 18 May 2022 8:26 PM IST (Updated: 18 May 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பசவராஜ் ஹொரட்டி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

பெங்களூரு:

ராஜினாமா செய்தார்

  கர்நாடக மேல்-சபை தலைவராக பணியாற்றி வந்தவர் பசவராஜ் ஹொரட்டி. ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்த அவர், சமீபத்தில் பெங்களூரு வந்திருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பா.ஜனதாவில் சேருவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் தனது மேல்-சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் பசவராஜ் ஹொரட்டி பா.ஜனதாவில் சேர்ந்தார்.

  இதில் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மந்திரிகள் ஆர்.அசோக், கோவிந்த் கார்ஜோள், சி.சி.பட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அவரை வரவேற்கிறேன்

  பசவராஜ் ஹொரட்டி மேல்-சபை உறுப்பினராக கடந்த 45 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேல்-சபை தலைவராகவும் பணியாற்றிய அனுபவத்தை பெற்றுள்ளார். அவர் ஆசிரியர்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். அதிக அனுபவம் உள்ள மரியாதைக்குரிய தலைவர் அவர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து பா.ஜனதாவில் சேருவதாக கூறினார்.

  அதன்படி அவர் இன்று(நேற்று) பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். அவர் கட்சியில் சேரும் நிகழ்ச்சியை உப்பள்ளியில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அவரது வருகையால் எங்கள் கட்சி மேலும் பலம் அடையும். நாட்டில் பசவராஜ் ஹொரட்டியை தவிர வேறு யாரும் 45 ஆண்டு காலம் எம்.எல்.சி.யாக இருக்கவில்லை. அவரது அனுபவத்தை நாங்கள் பயன்படுத்தி கொள்வோம். கட்சியில் அவருக்கு உரிய பதவி, மரியாதை வழங்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

நீண்டகால உறவு

  1980-ம் ஆண்டு முதல் பசவராஜ் ஹொரட்டி மேல்-சபை உறுப்பினராக பணியாற்றி வருகிறார். பா.ஜனதாவில் சேர்ந்ததின் மூலம் அவர் ஜனதா தளம்(எஸ்) கட்சி உடனான நீண்ட கால உறவை துண்டித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story