கல்லூரி வாசலில் மாணவியை மிரட்டி தாக்குதல்
கல்லூரி வாசலில் மாணவியை மிரட்டி தாக்குதல்
போத்தனூர்
கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 22). இவருக்கு கோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதையடுத்து காதலர்கள் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக அந்த மாணவி, பாலமுருகனுடன் பேசுவதையும், நேரில் சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இதனால் பாலமுருகன் அந்த மாணவி மீது ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரி வாசல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த பாலமுருகன், அந்த மாணவியிடம் பேசினார். அப்போது அவர், மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். ஆனால் மாணவி திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த மாணவியை மிரட்டி, தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story