நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்து பயிற்சி


நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்து பயிற்சி
x
தினத்தந்தி 18 May 2022 4:18 PM GMT (Updated: 18 May 2022 4:18 PM GMT)

நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்து பயிற்சி

நாமக்கல்:
நாமக்கல்லில் நில அளவை பணிகளை கணினியில் பதிவேற்றம் செய்வது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, நில அளவையாளர்கள் நேற்று பயிற்சி அளித்தனர்
நில அளவை பயிற்சி
தமிழகத்தில் போதிய நில அளவையாளர்கள் இல்லாததால், நிலங்களை அளவீடு செய்யும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் தமிழகம் முழுவதும் நிலஅளவை தொடர்பாக லட்சக்கணக்கான மனுக்கள் மீது தீர்வு காணப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதற்கு தீர்வு காணும் வகையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பணி தொடர்பாக பயிற்சி அளித்து, தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 7 நாட்கள் நில அளவை குறித்து பயிற்சி அளிக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கணினியில் பதிவேற்றம்
அதன்படி கடந்த 12-ந் தேதி முதல் நாமக்கல் தாலுக்காவிற்குட்பட்ட 55 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பணி தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதில் நில அளவையாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை பணி குறித்து பயிற்சி அளித்தனர். அதேபோல் எவ்வாறு நிலங்களை அளவீடு செய்வது என்பது குறித்து செல்லப்பம்பட்டி, களங்கானி, நல்லிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை கருவிகளை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இறுதி நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்ட விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நில அளவை வட்ட துணை ஆய்வாளர் பன்னீர்செல்வம், சார் ஆய்வாளர்கள் கபிலன், தனசேகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
300 பேர்
இதேபோல் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேந்தமங்கலம், கொல்லிமலை மற்றும் மோகனூர் என நாமக்கல் மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக நில அளவையாளர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் வருங்காலத்தில் நில அளவை தொடர்பான மனுக்கள் மீது கால தாமதமின்றி உடனடியாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story