நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் வாகன ஓட்டிகள் அவதி
நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று பலத்த மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பலத்த மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 24 மி.மீட்டர் மழை பெய்தது. இதேபோல் திருச்செங்கோட்டில் 9 மி.மீட்டர், மங்களபுரத்தில் 4 மி.மீட்டர், ராசிபுரத்தில் 3 மி.மீட்டர் மழை பதிவானது.
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று காலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. பிற்பகலுக்கு மேல் வானத்தில் கருமேகம் கூடியது. பிற்பகல் 3.45 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிந்தது.
வடிகால் வசதி
குறிப்பாக பிரதான சாலையில் நேதாஜி சிலை முதல் சேலம் ரோடு கார்னர் வரை சாலைக்கு மேல் சுமார் 1 அடிக்கு தண்ணீர் ஓடியதால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வந்ததால், துர்நாற்றம் வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இப்பகுதியில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாததே சாலையில் தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் குற்றம்சாட்டினர்.
இதேபோல் குட்டைதெரு மற்றும் அதை சுற்றி உள்ள தெருக்களிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story