குப்பையில் இருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு வருவாய் ஈட்ட திட்டம்


குப்பையில் இருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு வருவாய் ஈட்ட திட்டம்
x
தினத்தந்தி 18 May 2022 4:18 PM GMT (Updated: 18 May 2022 4:18 PM GMT)

குப்பையில் இருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு வருவாய் ஈட்ட புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி

குப்பையில் இருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு வருவாய் ஈட்ட புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்காட்சி

பொள்ளாச்சி நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் திட மற்றும் திரவ கழிவுகளை அறிவியல் பூர்வமாக கையாளுதல் தொடர்பான பயிற்சி முகாம் பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் தாணுமூர்த்தி தலைமை தாங்கினார்.

கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு பேசும்போது கூறுகையில், அவர் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் ஏராளமான தகவல்கள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குப்பைகளுடன் வீசப்படும் பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டப்படும் என்று நம்பிக்கை உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு மூலம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தலாம் என்றார்.

முன்னதாக திட மற்றும் திரவ கழிவுகள் குறித்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்து வைத்து, பார்வையிட்டார். கீரின் இந்தியா சர்வீஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் சீனிவாசன் திட்டம் குறித்து விளக்கி கூறினார். 

இதில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, துணை தலைவர் கவுதமன், நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் அனுப்பும் திட்டம்

தமிழகத்தில் நகராட்சி திட, திரவ வள மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு. இந்த திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு உள்ளது. நாம் தூக்கி எறியும் பொருட்களை 169 வகையாக தரம் பிரிக்கலாம். 

இதை தரம் பிரித்து அந்தந்த தொழிற்சாலைகளுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம் குப்பை கிடங்கிற்கு பொருள் செல்ல வேண்டியது இல்லை. குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பையில் 60 வகையான பொருட்கள் உள்ளது.

இதை வருமானமாக மாற்றும் திட்டம் உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். பொள்ளாச்சியை நகராட்சியின் குப்பையின் மதிப்பு ரூ.23 லட்சமாக அதிகரிக்கும். காலை 7 மணி முதல் 9 மணி வரை அனைத்து வீடுகளில் இருந்து பொருட்களை சேகரிப்பதால் ரோட்டிற்கு குப்பைகள் வர வேண்டிய அவசியம் இல்லை. 

இதனால் குப்பை தொட்டி தேவை இல்லை. இதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story