தர்மபுரி அருகே லாரி, வேனில் கடத்த முயன்ற 68 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது
தர்மபுரி அருகே மினி லாரி மற்றும் சரக்கு வேனில் கடத்த முயன்ற 68 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே மினி லாரி மற்றும் சரக்கு வேனில் கடத்த முயன்ற 68 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், ராமச்சந்திரன், ஏட்டுகள் வேணுகோபால், குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 46 மூட்டை ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. அந்த மினி லாரி மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்த டிரைவர் முகமது சலீம் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
தொடர் விசாரணை
இதேபோல் அந்த வழியாக சென்ற ஒரு சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினார்கள். அதில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது. இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேன் டிரைவர் கெட்டூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த 2 கடத்தல் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 68 மூட்டை ரேஷன் அரிசியையும் தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன. இந்த ரேஷன் அரிசி கடத்தல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story