வத்தல்மலை கொண்டை ஊசி வளைவுகளில் இரும்பு தடுப்புகள் அமைப்பு பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை


வத்தல்மலை  கொண்டை ஊசி வளைவுகளில் இரும்பு தடுப்புகள் அமைப்பு பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 18 May 2022 4:19 PM GMT (Updated: 18 May 2022 4:19 PM GMT)

வத்தல்மலை சாலையில் பாதுகாப்பை மேம்படுத்த கொண்டை ஊசி வளைவுகள் உள்ள பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி:
வத்தல்மலை சாலையில் பாதுகாப்பை மேம்படுத்த கொண்டை ஊசி வளைவுகள் உள்ள பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வத்தல்மலை
தர்மபுரி மாவட்டம் வத்தல்மலையில் 13 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்கு கேழ்வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட சிறு தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வத்தல்மலை அடிவாரத்தில் இருந்து 13 கி.மீ. மலைப்பாதையை கடந்தால் மலையின் மேல் பகுதியை அடையலாம். அங்கிருந்து மலைமேல் உள்ள கிராமங்களுக்கு சாலை வசதி உள்ளது.
வத்தல்மலைக்கு அடிவாரத்தில் இருந்து மலையின் மேல் பகுதி வரை உள்ள பகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 23 கொண்டை ஊசி வளைவுகளுடன் தார்சாலை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் இந்த சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் வத்தல்மலைக்கு பஸ் போக்குவரத்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வேன்கள், ஜீப்கள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. அவ்வப்போது சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இரும்பு தடுப்புகள் அமைப்பு
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வத்தல் மலைக்கு நேரில் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து வத்தல் மலையில் சாகச சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து வத்தல்மலைக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 40 இருக்கைகள் கொண்ட அரசு பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
அப்போது கொண்டை ஊசி வளைவுகளில் பஸ்களை பாதுகாப்பாக இயக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் சில கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் வத்தல்மலைக்கு விரைவில் சிறிய ரக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Next Story