தர்மபுரி மாவட்டத்தில் 136 மையங்களில் குரூப்-2 தேர்வை 37,366 பேர் எழுதுகிறார்கள் நாளை மறுநாள் நடக்கிறது
தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கும் குரூப்-2 தேர்வை 136 மையங்களில் 37,366 பேர் எழுதுகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கும் குரூப்-2 தேர்வை 136 மையங்களில் 37,366 பேர் எழுதுகிறார்கள்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தர்மபுரி மாவட்டத்தில் 136 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 37,366 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்வை கண்காணிப்பதற்கு துணை கலெக்டர் நிலையில் 6 பறக்கும் படைகளும், 27 நடமாடும் குழுக்களும் பல்வேறு துறைகளை சேர்ந்த 272 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் கைகடிகாரம் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற உபகரணங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. இவற்றை தேர்வு மையத்திற்கு எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்த தேர்வு நாளை மறுநாள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடப்பதால் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்றுவிட வேண்டும். தேர்வு மையங்களில் முறைகேட்டை தடுக்க ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு நடப்பதை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் பங்கேற்றவர்களுக்கு வசதியாக தேர்வு மையங்கள் வழியாக செல்லும் பஸ்கள் அங்கு நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து தேர்வர்களும் தேர்வு மையங்களில் அச்சமின்றி தேர்வுகள் எழுத வேண்டும். எந்தவிதமான முறைகேடான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story