சிக்கமகளூருவில் மேலும் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு


சிக்கமகளூருவில் மேலும் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 18 May 2022 4:25 PM GMT (Updated: 18 May 2022 4:25 PM GMT)

சிக்கமகளூருவில் மேலும் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவும் மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.


சிக்கமகளூரு:

நோய் பரவும் அபாயம்

  கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பல பகுதிகளில் கழிவுநீர், குடிநீருடன் கலந்ததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

  அதேபோல் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கோடை மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மறைவதற்குள் நேற்று முன்தினம் பெய்த திடீர் கனமழையால் பல பகுதிகளில் வாகனங்கள்,
வீடுகள், தோட்டங்கள் போன்றவை மழைநீரில் சேதமடைந்தன. மேலும், சாலையோர மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இரவு முழுவதும் மக்கள் இருளில் பொழுதை கழித்தனர்.

  இந்த நிலையில் சிக்கமகளூருவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ரமேஷ் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

மீட்பு படையினர் தயார்

  சிக்கமகளூரு மாவட்டத்தில் இன்னும் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையின்றி யாரும் வெளியில் சுற்றித்திரிய வேண்டாம்.

  தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகள் மேய்ச்சலுக்காக யாரும் வெளியே செல்லவேண்டாம். பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மழை நேரங்களில் மின் இணைப்புகளை துண்டித்துவிட வேண்டும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறை

  முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசுகையில் கூறியதாவது:-
  சிக்கமகளூரு அருகே ஹரேகொலலே தலிஹள்ளா கிராமத்தில் காலியாக உள்ள கிராம பஞ்சாயத்துக்கான தேர்தல் வரும் 20-ந் தேதி (நாளை) நடக்க உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படும். தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
  இவ்வாறு கலெக்டர்
கூறினார்.

Next Story