ரூ.6 லட்சத்துடன் மனைவி மாயம் கண்டுபிடித்து தரும்படி விவசாயி போலீசில் புகார்
சிவமொக்காவில், மார்க்கெட்டுக்கு அழைத்து சென்ற நிலையில் ரூ.6 லட்சத்துடன் மாயமான மனைவியை கண்டுபிடித்து தருமாறு போலீசில் விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சிவமொக்கா:
விவசாயி
சிவமொக்கா(மாவட்டம்) தாலுகா மத்தூர் கிராமம் கடேகல் பகுதியைச் சேர்ந்தவர் குமார். விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கடந்த 13-ந் தேதி கணவனும், மனைவியும் வீட்டில் இருந்து ரூ.6 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
அவர்கள் சிவமொக்கா லஷ்கர் மொகல்லா பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பணத்தில் இருந்து ரூ.3 லட்சம் கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு கொடுக்க வேண்டி இருந்தது.
லஷ்கர் மொகல்லா பகுதிக்கு செல்லும் வழியில் குமாரிடம் அவரது மனைவி மோட்டார் சைக்கிளை நிறுத்தச் சொன்னார். அதன்பேரில் குமாரும் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது அங்குள்ள மார்க்கெட்டுக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வருவதாகவும், மோட்டார் சைக்கிளில் உள்ள பணத்தை நீங்கள் எடுத்து வந்துவிடுங்கள் என்றும் கூறிவிட்டு குமாரின் மனைவி சென்றார்.
ரூ.6 லட்சத்துடன் மாயம்
அதன்பேரில் குமார் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை தேடினார். அப்போது பணத்தை காணவில்லை. இதையடுத்து அவர் மார்க்கெட்டுக்குள் சென்ற தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் அந்த பணத்தை மீட்டு எடுத்து வருதாகவும், அதுவரையில் மோட்டார் சைக்கிள் அருகிலேயே காத்திருக்கும்படியும் அவரது மனைவி குமாரிடம் கூறினார்.
அதன்பேரில் குமார் நீண்ட நேரமாக காத்திருந்தார். ஆனால் அவரது மனைவி வரவில்லை. பின்னர் செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் தன்னை ஏமாற்றிவிட்டு ரூ.6 லட்சத்துடன் தனது மனைவி மாயமாகிவிட்டது குமாருக்கு தெரியவந்தது.
போலீசில் புகார்
ஆனால் அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று தெரியவில்லை. பின்னர் அவர் தனது உறவினர்கள், குடும்பத்தினர், மனைவியின் தோழிகள் என பலரிடம் விசாரித்தார். ஆனாலும் அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இச்சம்பவம் குறித்து சிவமொக்கா கோட்டை போலீசில் குமார் புகார் செய்தார். அதில் தனது மனைவி ரூ.6 லட்சத்துடன் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story