கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில் கலெக்டர் ஆய்வு


கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2022 4:34 PM GMT (Updated: 18 May 2022 4:34 PM GMT)

பொள்ளாச்சி கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் செஞ்சேரிமலை, நெகமம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் கொப்பரை கொள்முதல் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90-க்கு கொள்முதல் செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்பட்டு வரும் கொள்முதல் மையத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் விவசாயிகளிடம் தங்கு, தடையில்லாமல் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

ஆய்வின் போது சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), கோவை வேளாண் விற்பனை குழு தனி அலுவலர், முதுநிலை செயலாளர், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர். 

இதை தொடர்ந்து செஞ்சேரிமலை, நெகமத்தில் சப்-கலெக்டர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் சமீரன் கூறியதாவது:-

விவசாயிகள் பயன்பெறலாம்

பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம் 9-ந்தேதியில் இருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. இன்று (நேற்று) 650 மூட்டை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

 ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்வதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகள் தரமான கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்து அரசின் ஆதார விலை மூலம் பயன்பெறலாம். 

மேலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கு நெகமம், செஞ்சேரிமலை, பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story