சின்னசேலம் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு


சின்னசேலம் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 May 2022 4:38 PM GMT (Updated: 18 May 2022 4:38 PM GMT)

சின்னசேலம் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னசேலம், 

சின்னசேலத்தில் உள்ள பேக்கரி கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அன்புபழனி, கதிரவன் ஆகியோர் சின்னசேலம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது சேலம் மெயின்ரோட்டில் உள்ள பேக்கரி கடையை ஆய்வு செய்தபோது, அங்கு இனிப்பு பொருட்களை தயாரிப்பதற்காக சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த ஜீரா 4 லிட்டர், கேக் தயாரிப்பதற்காக பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 4 ½ கிலோ கிரீம், சரியான முறையில் பராமரிக்கப்படாத நிலையில் இருந்த 15 பப்ஸ் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த கடை உரிமையாளருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, இனிமேல் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட  4 கிலோ புகையிலை பொருட்களையும், மளிகை கடையில் வைத்திருந்த 500 கிலோ பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைகளுக்கு அபராதமும் விதித்தனர். 

Next Story