வழிப்பறி கொள்ளையர்களால் ஸ்கூட்டரில் இருந்து விழுந்த ஆசிரியை படுகாயம்
ராஜாக்கமங்கலம் அருகே நகையை பறித்த போது வழிப்பறி கொள்ளையர்களால் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ஆசிரியை படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே நகையை பறித்த போது வழிப்பறி கொள்ளையர்களால் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த ஆசிரியை படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியை
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள மேலசங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி பிரியா (வயது 40). இவர் கணபதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதற்காக பிரியா தினமும் மேலசங்கரன்குழியில் இருந்து பள்ளிக்கு ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு மாலை 5.30 மணிக்கு ஸ்கூட்டரில் வீடுநோக்கி புறப்பட்டார்.
2½ பவுன் சங்கிலி பறிப்பு
கோதவிளை பகுதியில் சென்றடைந்த போது அவருக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து சென்றது. அதில் 2 பேர் இருந்தனர். பிரியாவை நெருங்கிய போது மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர், பிரியா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பிடித்து இழுத்தனர்.
இதில் அவரது கழுத்தில் கிடந்த சங்கிலி இரண்டாக அறுந்து மர்ம நபர் கையில் 2½ பவுன் நகை சிக்கியது. 3½ பவுன் அறுந்து சாலையில் விழுந்தது. உடனே மர்ம நபர்கள் கையில் கிடைத்த 2½ பவுன் சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
கேமரா காட்சிகள் ஆய்வு
சங்கிலியை மர்மநபர் பறித்த போது ஸ்கூட்டரில் இருந்து பிரியா கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story