ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவுபார்த்த பயங்கரவாதி கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 18 May 2022 4:47 PM GMT (Updated: 18 May 2022 4:47 PM GMT)

ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவுபார்த்த பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

நாக்பூர், 
ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவுபார்த்த பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 
 பயங்கரவாதி சிக்கினார்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகமான ‘ஹெட்கேவார் ஸ்மிரிதி பவன்’ மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெசிம்பாக் பகுதியில் அமைந்துள்ளது. இதை கடந்த ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உளவு பார்த்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. 
 இந்த உளவு விவகாரம் தொடர்பாக மராட்டிய பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவு பார்த்ததாக பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் போலீசில் சிக்கியுள்ளார். அவரை ஜம்மு-காஷ்மீரில் மராட்டிய பயங்கரவாத தடுப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அந்த பயங்கரவாதியின் பெயர் ரயீஸ் அகமது ஷேக் (வயது 26) என்றும், அவர் ஜம்மு- காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா டவுனை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. 
பரபரப்பு தகவல்
அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நாக்பூர் கொண்டு வந்து கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 
பாகிஸ்தானை தளமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நவாப்பூர் பிரிவின் தளபதியான உமர் என்பவர் தான் ரயீஸ் அகமது ஷேக்கை நாக்பூர் அனுப்பி உளவு பார்க்க சொல்லி உள்ளார். அவருக்கு நாக்பூரில் ஒருவர் உதவி செய்வதாக தெரிவித்திருந்தார். 
அதன்படி ரயீஸ் அகமது ஷேக் கடந்த ஆண்டு ஜூலை 13-ந் தேதி டெல்லி-மும்பை-நாக்பூர் விமானம் மூலம் இங்கு வந்து சிதாபுல்டி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். உமர் கூறியது போல யாரும் உதவ வராததால், மறுநாள் அவர் ஆட்டோ பிடித்து கூகுள் மேப் உதவியுடன் ரெசிம்பாக் பகுதியை அடைந்தார். 
படம் பிடித்து அனுப்பினார்
ரெசிம்பாக் மைதானத்தில் இறங்கிய ரயீஸ் அகமது ஷேக் தனது செல்போனில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை படம்பிடித்து உமருக்கு அனுப்பினார். ஆனால் வீடியோ தெளிவாக இல்லை என்று உமர் கூறியுள்ளார். மீண்டும் வீடியோ எடுத்து அனுப்பும்படி தெரிவித்துள்ளார். ஆனால் போலீஸ் பாதுகாப்பை காரணம் காட்டி மீண்டும் வீடியோ எடுக்க அவர் மறுத்து உள்ளார். பின்னர் ஆட்டோவில் மசூதி ஒன்றுக்கு சென்று விட்டு, மாலையில் ஓட்டலுக்கு திரும்பியுள்ளார். ஜூலை 15-ந் தேதி விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு சென்றதாக ரயீஸ் அகமது ஷேக் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 
பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை உளவு பார்த்த விவகாரத்தில் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story