கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால கல்கோடரி காட்சிக்கு வைப்பு


கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால கல்கோடரி காட்சிக்கு வைப்பு
x
தினத்தந்தி 18 May 2022 4:48 PM GMT (Updated: 2022-05-18T22:18:46+05:30)

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால கல்கோடரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி:
கல்கோடரி
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பழமையான பொருள் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான பொருளாக பழங்கால கல்கோடரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
மனித குல வரலாறு தொல் பழங்கற்காலம் முதல் தொடங்குகிறது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதன் வடிவமைத்த பல்வேறு கல்லாயுதங்களில் முக்கியமானது கல்கோடரியாகும். இவை கூழாங்கல்லின் மையப்பகுதியிருந்து தயாரிக்கப்பட்டுள்ளன. இது 5 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
உலகெங்கிலும் கண்டறியப்பட்ட தொல்பழங்கற்கால கல்லாயுதங்கள் யாவும் குவார்ட்சைட் என்னும் உருமாறிய மணற்கல்லால் செய்யப்பட்டதால் அக்கால மனிதனை தொல்லியலாளர்கள் குவார்ட்சைட் மனிதன் என்றே அழைக்கின்றனர். 
மெட்ராஸ் கோடரி
இந்த காலகட்டத்தை சேர்ந்த இதே கல்லால் ஆன கல்கோடரி ஒன்றை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னைக்கு அருகே பல்லாவரம் என்ற இடத்தில் ராபர்ட் புரூஸ்புட் என்ற புவியியலாளர் கடந்த 1863-ம் ஆண்டு கண்டெடுத்தார். அன்றிலிருந்தே இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஆய்வு தொடங்கியது. 
இதனால் இந்தியாவின் தொல்பழங்கற்கால கல்கோடரியை, ‘மெட்ராஸ் கோடரி’ என்றே அழைக்கின்றனர். தொல்லியல் அறிஞர் சுகவனம் முருகன், அத்திரம்பாக்கம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய கைக்கோடரி ஒன்றை, கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துக்கு வழங்கி உள்ளார். அது தான் இங்கு தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story