நாமக்கல் மாவட்டம் முழுவதும், நாளை மறுநாள் 105 மையங்களில் குரூப்-2 தேர்வு 31,859 பேர் எழுதுகின்றனர்
நாமக்கல் மாவட்டம் முழுவதும், நாளை மறுநாள் 105 மையங்களில் குரூப்-2 தேர்வு 31,859 பேர் எழுதுகின்றனர்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை நாளை மறுநாள் 105 மையங்களில் 31,859 பேர் எழுத உள்ளனர்.
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2, 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களை நிரப்பும் வகையில் இத்தேர்வு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. தமிழக அளவில் இத்தேர்வை சுமார் 17 லட்சம் பேர் எழுத உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு தாலுகாக்களில் 105 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், நாமக்கல் தாலுகாவில் 15,360 பேர், ராசிபுரம் தாலுகாவில் 8,576 பேர், திருச்செங்கோட்டில் 7,923 என மொத்தம் 31,859 பேர் எழுத உள்ளனர்.
11 பறக்கும் படை
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்பேரில் 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கருவூல அலுவலகங்களில் இருந்து வினாத்தாள்களை எடுத்து செல்வதற்காக தாசில்தார், துணை தாசில்தார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நிலையில் 30 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய 30 போலீசாரும் செல்கின்றனர். மேலும், ஆய்வு அலுவலர்கள் என்ற அடிப்படையில் ஒரு மையத்திற்கு இருவர் வீதம் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த குரூப்-2 தேர்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை வருவாய்த்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். இத்தேர்வில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story