கார்த்தி ப.சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி: சுதர்சன நாச்சியப்பன் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி பதில்


கார்த்தி ப.சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி: சுதர்சன நாச்சியப்பன் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி பதில்
x
தினத்தந்தி 26 March 2019 4:28 AM IST (Updated: 26 March 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

கார்த்தி ப.சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, ‘வருத்தத்தை நாகரிகமான முறையில் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

சென்னை,

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இந்த 9 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைமை வேட்பாளரை அறிவித்தது.

சிவகங்கை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது, இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த தொகுதியின் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டார்.

இதற்கு முன்னாள் மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோர்ட்டுக்கு போகக்கூடியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார் என்று கார்த்தி ப.சிதம்பரம் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கட்சியில் தகுதியான வேட்பாளர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் 9 பேருக்குத்தான் வாய்ப்பு வழங்க முடியும். நான் கூட 2 முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, ஒரு வாரம் தேர்தல் பணி ஆற்றிய நேரத்தில் மாற்றப்பட்டேன். இதுபோன்ற தருணங்களில் எல்லோருக்கும் வருத்தம் ஏற்படத்தான் செய்யும், யாரையும் வருத்தப்படக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது.

அதேநேரத்தில், அவர்கள் தங்கள் கருத்துகளையும், வருத்தத்தையும் நாகரீகமான முறையில் தெரிவிக்க வேண்டும். தங்கள் ஆதங்கத்தை வெளியே சொல்வதற்கு பதிலாக கட்சியின் மேலிடத்தில் சொல்லலாம். எந்த முடிவையும் கட்சி மேலிடம் தான் எடுக்கும். கார்த்தி சிதம்பரத்துக்கு நிர்ப்பந்தத்தின் பேரில் சீட் வழங்கி இருப்பதாக கூற முடியாது. யாரும் கட்சித் தலைமையை நிர்ப்பந்தப்படுத்த முடியாது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடாது. நாங்கள் எதிர்பார்த்து கேட்ட தொகுதிகள் கிடைத்திருக்கிறது. விரைவில் எங்கள் தலைமை தேர்தல் அறிக்கையை வெளியிடும்.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் வருகிறார்கள்.

தமிழகத்தின் உரிமைக்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. அந்த தைரியம், துணிவு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அ.தி.மு.க. அரசு மாநில உரிமைகளை மோடியிடம் அடகு வைத்து விட்டது. மோடி தலைமையில் நாடு பாதுகாப்பாக இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது விந்தையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story