ராகுல்காந்தி அறிவித்துள்ள நிதியுதவி ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும் சிவகங்கையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


ராகுல்காந்தி அறிவித்துள்ள நிதியுதவி ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும் சிவகங்கையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2019 1:05 AM IST (Updated: 30 March 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழை, எளியோருக்கான ரூ.72 ஆயிரம் நிதியுதவி பயனாளிகளின் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும் என்றும், நம் கைக்கு வருமா? வராதா? என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்

சிவகங்கை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் பேசியதாவது:-

மானம் காத்தவர்கள் மருது பாண்டியர்கள் என்று சொன்னால், அப்படி மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகளாகிய நீங்கள் தமிழ்நாட்டின் மானத்தையும், இந்தியாவின் மானத்தையும் காப்பாற்ற வேண்டும். நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடக்கூடிய கார்த்தி சிதம்பரத்தை பற்றி உங்களுக்கு அதிகப்படியாக விளம்பரப்படுத்த தேவையில்லை.

அவரை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும் புரியும். அவருடைய வண்டவாளங்கள் அத்தனையும் நன்றாக அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் நீங்கள். எச்.ராஜா ஆளுங்கட்சியின் துணையோடு பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் ஒரு எதிர்க்கட்சியின் வேட்பாளராக நான் அவரைப் பார்க்கவில்லை, தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை நாம் இதுவரையில் பார்த்திருக்க முடியாது, இனிமேலும் பார்க்கவும் முடியாது. அதற்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடியவரைதான் தேர்ந்தெடுத்து இன்றைக்கு நம்மை எதிர்க்கிற வேட்பாளராக நிறுத்தி வைத்திருக்கின்றார்கள்.

நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்கு தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பதுதான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

பாரதீய ஜனதா கட்சியில் இருக்கக்கூடிய அனைவரையும் நான் சொல்ல மாட்டேன், அவர்களுடைய கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சொல்வதை நாங்கள் விமர்சிக்கலாம், அதுபோல் நாங்கள் சொல்வதை அவர்கள் விமர்சிக்கலாம், அது வேறு. அது அரசியல் பண்பாடு. அரசியல் ரீதியாக தத்துவ ரீதியாக கொள்கை ரீதியாக விமர்சிப்பது என்பது ஜனநாயகத்தின் உரிமை. ஆனால், கொச்சைப்படுத்தி கலவரம் தூண்டுவதில், அசிங்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கக்கூடியவர்தான் எச்.ராஜா.

இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்திற்கு போனால், அது நாடாளுமன்றத்துக்கே அவமானம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. நாடாளுமன்றத்திற்குச் சென்றும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டிருப்பார் என்று சொன்னால், அங்கு இருக்கக்கூடியவர்கள் என்ன சொல்வார்கள்? இவர் எந்த தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார்? என்ற ஒரு கேள்வி வருகின்ற பொழுது, சிவகங்கை தொகுதியில் இருந்து வந்திருக்கின்றார் என்று சொன்னால், இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய உங்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம் என்பதை தயவு செய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.

குட்கா விஜயபாஸ்கர் தற்பொழுது இந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகின்றார். அப்படி வருகின்ற காரணத்தினால் எடப்பாடியிடம் சபதம் செய்து கொண்டு வந்து இருக்கின்றாராம், இந்தத் தொகுதியை நான் வெற்றி பெற வைக்கின்றேன் என்று. இந்த சபதத்தை மருத்துவமனைகளை சீர்படுத்துகிறேன் என்று சொல்லி சபதம் போடவக்கில்லை. மருத்துவமனைகளில் கெட்டு போன ரத்தம் ஏற்றும் பிரச்சினை உள்ளிட்ட பல கொடுமை நடந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால் ஏழை எளியவர்கள் நடுத்தர குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடியவர்கள் எங்கு செல்வார்கள்?

எனவே, இதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். எனவே எதிர்க்கட்சியில் நிற்கக்கூடிய எச்.ராஜாவும், அதற்குத் துணையாக விஜயபாஸ்கரும் வாக்கு கேட்கின்ற வருகின்ற பொழுது உங்களுக்கு நினைவுக்கு வர வேண்டியது குட்கா ஊழல் உங்களின் கவனத்திற்கு வர வேண்டும் மறந்து விடக்கூடாது.

இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி விட்டது, மோடி முன்னேற்றி விட்டார் என்று சொல்லி வாக்குகளை கேட்கின்றீர்களே? மோடிக்கும், அருண்ஜெட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியசாமிதான் டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கின்றார். அவர் பேட்டியாக சொன்ன வார்த்தைகள் இவை. எனவே பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு, பொருளாதாரம் தெரியவில்லை என்று நாம் சொல்லவில்லை, சுப்பிரமணியசாமியே சொல்லுகின்றார்.

மோடி சொன்ன மேக் இன் இந்தியா திட்டம் பற்றி சுப்பிரமணியசாமி என்ன சொல்கிறார் என்றால், மேக் இன் இந்தியா கொள்கை வெற்றிபெற அடிப்படை தள கட்டமைப்பிற்கு மட்டும் 72 லட்சம் கோடி ரூபாய் பணம் தேவை. ஆனால் இப்பொழுது முதலீடு செய்யப்பட்ட தொகையின் மதிப்பு 2014-ம் ஆண்டைவிட குறைவானது என்று ஆதாரத்தோடு குறிப்பிடுகின்றார். இதெல்லாம் நாங்கள் கண்டுபிடித்தது, நாங்கள் சொல்வது அல்ல, பிரதமர் நரேந்திரமோடியின் பொருளாதார சீரழிவிற்கு சுப்பிரமணியசாமி கொடுத்திருக்கக்கூடிய சாட்சியங்கள்.

ராகுல்காந்தி ஒரு அருமையான உறுதிமொழியை சொல்லி இருக்கின்றார், அது என்னவென்றால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிகவும் ஏழ்மையாக இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு மாதம் மாதம் 6,000 ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் கிடைக்க போகின்றது. சிலருக்கு சந்தேகம் வரும், நமது கைக்கு வருமா? வராதா? என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, இந்த 72 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கிகணக்கில் வந்து சேர்ந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story