தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் ஜெயக்குமார் ‘பகீர்’ குற்றச்சாட்டு


தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் ஜெயக்குமார் ‘பகீர்’ குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 April 2019 7:30 PM GMT (Updated: 2019-04-02T00:24:25+05:30)

தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் ‘பகீர்’ குற்றச்சாட்டு கூறினார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு, தேர்தல் நடப்பதால் பழிவாங்கும் நடவடிக்கை என்று துரைமுருகன் கூறினார். ஆனால் இப்போது வருமான வரித்துறை சோதனையில் கத்தை, கத்தையாக பணம் கிடைத்திருக்கிறதே.. இதற்கு அவர் என்ன சொல்லப்போகிறார்?.

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க தி.மு.க.வினர் பணத்தை பதுக்கி வைத்திருப்பது எங்களுக்கு தெரியும். தேர்தலில் குறுக்கு வழியில் வாக்காளர்களுக்கு கொடுக்க தொகுதிக்கு சராசரியாக ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். தென் சென்னை தொகுதிக்கு மட்டும் ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளனர். அந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க தி.மு.க.வினர் ‘புளு ஸ்கை’ ஆபரேசன் மூலம் தொகுதியில் 15 முதல் 20 பேரிடம் கொடுத்து பதுக்கி வைத்திருக்கிறார்கள்.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினால் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும். எத்தனை கோடி கொடுத்தாலும், அ.தி.மு.க. கூட்டணியை யாராலும் வெற்றி பெற முடியாது.

எங்களுக்கு பணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஜெயலலிதா செய்த சாதனைகள், எங்களுடைய கொள்கைகளே போதும். மக்கள் அதை பார்த்தே எங்களுக்கு வாக்களித்து, மீண்டும் அமோக வெற்றியை தருவார்கள். கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விடவும், இமாலய வெற்றியை நாங்கள் பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story