வருமான வரித்துறை மூலம் வேலூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை தொடர்கிறது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வருமான வரித்துறையினர் வேலூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
வேலூர் சோதனை தொடர்கிறது
தமிழகத்தில் 1-ந் தேதியன்று தேர்தல் விதிகளை மீறியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ரூ.2.23 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.80.35 கோடி பணம் பிடிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ரூ.132 கோடி மதிப்புள்ள 468 கிலோ தங்கம், ரூ.1.70 கோடி மதிப்புள்ள 414 கிலோ வெள்ளி உள்பட ரூ.135 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வேலூரில் வருமான வரித்துறை நடத்தும் சோதனை இன்னும் முடியவில்லை. அந்த சோதனை தொடர்பாக எந்த தகவலும் எங்களுக்கு தரப்படவில்லை. சோதனை முழு அளவில் முடிந்த பிறகுதான் அறிக்கை தருவார்கள். அங்கு பிடிக்கப்பட்ட பணம், எத்தனை இடங்களில் சோதனை உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இப்போதைக்கு தரப்படவில்லை. அதையெல்லாம் ரகசியமாக வைத்திருப்பார்கள்.
அங்கு சோதனை தொடர்கிறது என்றால், அது, வருமான வரித்துறையின் சட்டவிதிகளின்படி மேற்கொள்ளப்படுவதாக இருக்கும். அது எத்தனை நாள் நடத்தப்படும் என்பதெல்லாம் அவர்களின் முடிவுக்கு உட்பட்டது. நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.
அறிக்கை
சிறப்பு செலவினப் பார்வையாளர் அதை கண்காணித்துக்கொண்டிருக்கிறார். மேலும் சோதனை நடக்கும் பகுதியில் செலவினப் பார்வையாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்கள்.
தலைமை தேர்தல் அதிகாரி, வருமான வரித்துறை ஆகியோரும் அறிக்கை அளிப்போம். அதை வைத்து இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வரும். சென்னைக்கு வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இதுபற்றி வருமான வரித்துறையிடம் விவாதிப்பார். அப்போது அவரிடம் அந்த சோதனை பற்றி தெரிவிப்பார்கள்.
தூத்துக்குடி சோதனை
தூத்துக்குடியில் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டுக்குள் போய் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டதாக நீங்கள் கூறும் தகவல் எனக்கு தெரியவில்லை.
ஆனால் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொள்வதில் சில பொதுவான அறிவுரைகளை அளித்திருக்கிறோம். அதன்படி, அவர்கள் சாலையில்தான் சோதனை செய்யவேண்டும். ஆனால் அவர்களை மீறி வீட்டுக்குள் வாகனங்கள் சென்றுவிட்டால், அந்த வீட்டை சுற்றி காவலுக்கு நின்றுகொண்டு, வருமான வரித்துறையினரை அழைக்க வேண்டும். அவர்கள் சட்டப்படியான அனுமதியைப் பெற்று வீட்டுக்குள் செல்வார்கள்.
தொகுதிக்கு இரண்டு செலவினப் பார்வையாளர்கள் நியமனம், மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நியமனம் போன்றவை இந்த தேர்தலுக்கென்று சிறப்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






