சென்னை தி.மு.க. பிரமுகர் பரமசிவன் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் இன்று காலை மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது.
சென்னை:
அண்ணாநகர் தி.மு.க. பகுதி செயலாளராக இருப்பவர் பரமசிவம். டி.பி.சத்திரம் தர்மராஜா கோவில் தெருவில் இவரது வீடு உள்ளது. இன்று காலை 6 மணியளவில் பரமசிவத்தின் வீட்டுக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பரமசிவத்தின் கார் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் டி.பி.சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பரமசிவத்தின் வீட்டு முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெட்ரோல் குண்டுகளை வீசியது யார்? என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அமைந்தகரை மஞ்சாங்கொள்ளை தெரு பகுதியில் நேற்று தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தெகலான் பாகவிக்கு ஆதரவு திரட்டினர். இந்திய தவ்கீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பெண்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சரிபார்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்ட தி.மு.க.வினர், தவ்கீத் ஜமாத் பெண்களை தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக அமைந்தகரை போலீசில் பரமசிவம் உள்பட 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
அதில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பெண்களை தி.மு.க.வினர் தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது. இதன் பின்னர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினரும், தினகரன் கட்சியினரும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தனர். இதனால் நள்ளிரவு வரையில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில்தான் தி.மு.க. பிரமுகர் பரமசிவம் வீட்டில் இன்று காலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதனால் மோதல் சம்பவத்துக்கும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story






