தற்கொலை செய்துகொண்ட பா.ஜனதா பிரமுகரின் கள்ளக்காதலியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மத்தியஸ்தம் செய்ய முயன்றாரா?


தற்கொலை செய்துகொண்ட பா.ஜனதா பிரமுகரின் கள்ளக்காதலியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மத்தியஸ்தம் செய்ய முயன்றாரா?
x

பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட பா.ஜனதா பிரமுகர் கள்ளக்காதலியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மத்தியஸ்தம் செய்ய முயன்றதாக ஆடியோ வெளியாகி உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட பா.ஜனதா பிரமுகர் கள்ளக்காதலியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மத்தியஸ்தம் செய்ய முயன்றதாக ஆடியோ வெளியாகி உள்ளது.

பா.ஜனதா பிரமுகர் தற்கொலை

பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹீரோஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்தராஜூ. பா.ஜனதா பிரமுகரான இவர் கடந்த மாதம்(மே) 13-ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ஹனிடிராப் முறையில் மிரட்டி ஆனந்தராஜூவை தற்கொலைக்கு தூண்டியதாக கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரேகா, அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் ஆனந்தராஜை ஹனிடிராப் முறையில் மிரட்டவில்லை என்றும், அவருடன் தனக்கு கள்ளக்காதல் இருந்ததாகவும் ரேகா கூறினார். மேலும் தங்களது கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால் ஆனந்தராஜூவை வீட்டில் சிறைவைத்து அவரது மனைவி சுமா கொடுமைப்படுத்தியதால் தான் ஆனந்தராஜூ தற்கொலை செய்து கொண்டார் என்றும் ரேகா கூறி இருந்தார்.

2 கடிதங்கள்

மேலும் போலீசார் தன்னை மட்டும் குறிவைத்து விசாரணை நடத்துவதாக கூறி பஸ் முன்பு பாய்ந்து ரேகா தற்கொலைக்கும் முயன்று இருந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆனந்தராஜூ எழுதியதாக கூறப்படும் 2 கடிதம் வெளியானது. அதில் ஒரு கடிதத்தை தனது மனைவி சுமாவுக்கும், இன்னொரு கடிதத்தை கே.ஆர்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ஆனந்தராஜூ எழுதி இருந்தார்.

சுமாவுக்கு எழுதிய கடிதத்தில் என்னை மன்னித்து விடு. கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரேகா என்ற பெண்ணிடம் இருந்து ஹனிடிராப் முறையில் பண மிரட்டல் வருகிறது. குழந்தைகளை கவனித்து கொள் என்று எழுதப்பட்டு இருந்தது. இன்ஸ்பெக்டருக்கு எழுதிய கடிதத்தில் கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரேகாவுக்கு நான் அதிக பணம் கொடுத்தேன். தற்போது அவர் என்னை மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இன்ஸ்பெக்டர் பேசிய ஆடியோ

இந்த நிலையில் ஆனந்தராஜூ-சுமா சார்பாக ரேகாவிடம் பேடரஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் சுமாவுடன் பேசும் ராஜீவ் ஆனந்தராஜூக்கு தொல்லை கொடுக்க கூடாது என்றும், உங்களது மகள் படிப்பு செலவுக்கு ரூ.15 லட்சம் வாங்கி தருவதாவும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு ரேகா ஒப்புக்கொள்ளாததால் ஆனந்தராஜூ தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த வழக்கை மத்தியஸ்தம் செய்து முடித்து கொடுக்க ஆனந்தராஜூ, ரேகா ஆகியோரிடம் இருந்து ராஜீவ் பணம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே ஆனந்தராஜூ தற்கொலை செய்து கொண்ட மே 13-ந் தேதி மதியம் அவர் தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வரும் காட்சிகளும், இரவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஆனந்தராஜூவை அக்கம்பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லும் காட்சிளும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story