கேரள டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைப்பு


கேரள டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 15 Nov 2022 6:45 PM GMT (Updated: 15 Nov 2022 6:46 PM GMT)

A separate body headed by Inspector

மங்களூரு:

கேரள டாக்டர்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பதியடுக்காவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. பல் டாக்டரான இவர், கடந்த 8-ந்தேதி உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அருகே ஹத்தியங்கடி கிராமத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் அவரை ரெயிலில் தள்ளி கொலை செய்தனரா? என்பது தெரியவில்லை. மேலும் கிருஷ்ணமூர்த்தியின் மகள், தனது தந்தை ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று குந்தாப்புரா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக குந்தாப்புரா போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காசர்கோடு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

இந்த நிலையில் உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா நேற்று முன்தினம், கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் குந்தாப்புரா துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணா ஆகியோரும் இருந்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா, குந்தாப்புரா துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தனிப்படை அமைப்பு

கேரள பல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி குந்தாப்புரா அருகே ஹத்தியங்கடி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையில் 3 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். தனிப்படை போலீசார் காசர்கோடு சென்று விசாரிக்க உள்ளனர். மேலும் காசர்கோடு போலீசார் கைது செய்துள்ள 5 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடம் குந்தாப்புரா ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் ரெயில்வே போலீசாரிடமும் சில தகவல்களை கேட்க உள்ளோம். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் கொலை என புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க சரியான வியூகங்கள் மற்றும் திட்டங்களை தனிப்படை போலீசார் வகுத்துள்ளனர். விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும். விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாலிபர் மீது வழக்கு

இதற்கிடையே கேரள பல் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மரணம் தொடர்பாக ஆலம்பாடியை சேர்ந்த ரஷித் என்ற வாலிபர் முகநூலில் (பேஸ்புக்) தரக்குறைவான கருத்து பதிவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து உடுப்பி வித்யாநகர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கிருஷ்ணமூர்த்தியின் மகளான டாக்டர் வர்ஷா, மங்களூருவில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவை சந்தித்து தனது தந்தை மரணம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story