ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணம் மத்திய அரசால் மீட்கப்பட்டுள்ளது - ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அரசு சுமார் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டுள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசு சுமார் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டுள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஏழைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒருமுறை கூறியிருந்தார். ஆனால், இன்று நூறு சதவீத தொகையானது மக்களை சென்றடைகிறது.
நாடு குறுக்கு வழி அரசியலை நோக்கி செல்லக்கூடாது. நல்லாட்சியை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் பிரதமருக்கு தெளிவான பார்வை உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் நல்லாட்சி சென்றடைவதை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டமைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் பல நாடுகள் இன்னும் போராடி கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா டிஜிட்டல் தளமான கோவின் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது.
மத்தியஅரசால் ரூ.1.25 லட்சம் கோடி கறுப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. ரூ. 4 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 1.75 லட்சம் செயல்பாடாத கம்பெனிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.