கர்நாடகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சில நேரங்களில் மழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மற்றும் மலைநாடு பகுதியில் உள்ள குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைநாடு பகுதியில் உள்ள சிவமொக்கா, குடகு, சிக்கமகளூரு மற்றும் மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்பகுதியில் உள்ள மண்டியா, ராமநகர், துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். பெங்களூருவை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கே.ஆர்.எஸ். அணை
மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதனால் அந்த அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதன் அளவு 75 ஆயிரம் கனஅடியில் இருந்து 1½ லட்சம் கனஅடி வரை அதிகரிக்கும் என்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.