ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்


ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ்
x

சிவமொக்காவில் நூதன முறையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிவமொக்கா;

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் சாளுக்கியா நகர் பவானி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்கள் செல்போன் எண்ணுக்கான சேவை முழுமை பெற உங்களுடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த குறுந்தகவலில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் சென்று ஆன்லைனில் பதிவு செய்யுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த அதிகாரியை ஒரு செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தன்னை எம்.டி.என்.எல். என்ற செல்போன் நிறுவன அதிகாரி எனக்கூறி அறிமுகம் செய்து கொண்டார். மேலும் நீங்கள் உங்களுடைய அனைத்து தகவல்களையும் கொடுத்தால் மட்டுமே உங்களின் செல்போன் எண்ணுக்கான சேவை முழுமை பெறும் என்று அந்த ஓய்வுபெற்ற அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.

அபேஸ்

அவர் கூறியதை அடுத்து அந்த ஓய்வுபெற்ற அதிகாரி தன்னுடைய ஆதார் கார்டு எண், வங்கி கணக்கு விவரங்கள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் 2 தவணைகளாக தலா ரூ.49 ஆயிரத்து 999 வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஓய்வுபெற்ற அதிகாரி மீண்டும், மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச முயற்சித்தார்.

அப்போது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் நூதன முறையில் அந்த மர்ம நபர் தன்னை ஏமாற்றி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 998-ஐ மோசடி செய்து அபேஸ் செய்து கொண்டது ஓய்வுபெற்ற அதிகாரிக்கு தெரியவந்தது. பின்னர் இதுபற்றி அவர் சிவமொக்கா மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story