கர்நாடகத்தை புரட்டிப்போட்ட மழை காவிரியில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு
கர்நாடகத்தை பருவமழை புரட்டிப்போட்டு உள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. பேய் மழையாக கோரத்தாண்டவமாடி வரும் மழை மாநிலத்தை புரட்டி போட்டுள்ளது. மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து விழுந்ததால் ஏராளமான கிராமங்களுக்கு போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளும், நிவாரண பணிகளும் முடக்கிவிடப்பட்டுள்ளன.
தொடர் கனமழை காரணமாக காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 50,640 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 122.60 ஆக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 72,964 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதேபோல், கபினி அணைக்கு வினாடிக்கு 30,870 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இவ்விரு அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட நீர் திருமகூடலு திருவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழ்நாட்டுக்கு செல்கிறது. அதன்படி நேற்று காலையில் இவ்விரு அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 964 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.